உண்மையான தந்தை பற்றி வேதாளம் சொன்ன கதை!!

  • by
vedhalam's story on real father

ஒருநாள் காட்டின் வழியே வேதாளத்தை சுமந்து கொண்டு விக்ரமாதித்தியன் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் ஒரு கதையை கூறியது. ஜெயநகர் எனும் நாட்டில் மாயன் எனும் ஒரு இளைஞன் வசித்து வந்தான். இவனுக்கு  திருடுவது தான் தொழிலாக இருந்து வந்தது. ஒருமுறை இரவு நேரத்தில் திருடுவதற்காக அந்த ஊரில் சுற்றிக் கொண்டிருந்த போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவனை பிடிப்பதற்காக துரத்தி சென்றனர். அவர்களிடமிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்து அந்த திருடன் அங்கு பக்கத்தில் இருந்த ஒரு வீட்டின் அறையில் புகுந்து ஒளிந்து கொண்டான். அப்போது அந்த அறையில் திருமணமாகாத ஒரு இளம்பெண் இருப்பதை பார்த்தான். அந்தப் பெண்ணும் இந்தத் திருடன் மாயனை பார்த்துவிட்டாள். ஆனாலும் வெளியில் வந்த காவலர்களிடம் இந்தப் பெண் திருடனைக் காட்டிக் கொடுக்கவில்லை. இந்தப் பெண்ணின் பெயர் சுகந்தி. எனவே மாயனுக்கு இந்தப் பெண்ணிடம் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் மாயனிடம் ஈர்க்கப்பட்டாள் .

சுகந்தியின் கர்ப்பம் 

அதன் பிறகு தினமும் இரவு நேரத்தில் அவர்களின் சந்திப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. இவர்கள் இருவரும் மிக நெருங்கிப் பழகிய காரணத்தால் சுகந்தி கர்ப்பமானாள். இதை தெரிந்துகொண்ட மாயன் அவளை கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினான். இந்த சமயத்தில் காவலர்களிடம் மாயன் பிடிபட்டு கொண்டான். அப்போது காவலர்களுக்கும் மாயனுக்கும் இடையே நடந்த சண்டையில் மாயன் இறந்தான். இதை அறிந்த சுகந்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தாள்.

மேலும் படிக்க – எச்சரிக்கையாக இருங்கள் இது உண்மையான காதல் இல்லை..! 

 துரோகம் 

அதே நேரத்தில் அவளுக்கு இன்னொரு இளைஞனான ஜெயன் என்பவனுடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். சுகந்தியும் வேறுவழியில்லாமல் தனது கர்ப்பத்தை மறைத்து ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டாள். அதன் பிறகு பத்து மாதத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த சுகந்தி அந்த குழந்தை அவளுக்கும் ஜெயனுக்கும் பிறந்ததுதான் என்று அனைவரையும் நம்ப வைத்தாள். 

அந்த ஆண் குழந்தைக்கு அவள் நகுலன் என்று பெயரிட்டு ஜெயனும் சுகந்தியும் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தனர். சில வருடங்களுக்குப் பிறகு நகுலனின் தந்தை இறந்துபோனார். இளைஞனாக வளர்ந்திருந்த நகுலன் இறந்துபோன தனது தந்தை ஜெயனுக்கு கங்கை நதியில் திதி கொடுக்கும் பொருட்டு பூஜையை செய்ய அந்தத் திதி பிண்டத்தை கங்கை நீரில் விடச் சென்றான். அப்போது அந்த நீருக்குள் இருந்து இரண்டு கைகள் தோன்றியது. அப்போது ஒரு கை ஜெயன் உடையது மற்றொரு கை மாயன் உடையதாக இருந்தது. அந்த இரண்டு கைகளும் தானே நகுலனுடைய தந்தை என்றும் தனக்குத் தான் இந்த திதி பிண்டத்தைப் படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதனால் குழம்பிப் போன நகுலன் தனது தாயிடம் சென்று இதைப் பற்றி கேட்டான். அப்போதுதான் தாய் சுகந்தி நகுலனுடைய உண்மையான தந்தை மாயன் தான் என்பதை கூறினாள். இதனால் மேலும் குழப்பம் அடைந்த நகுலன் யாருக்கு இந்த பிண்டத்தை கொடுப்பது என்று அறியாமல் தவித்தான்.

 வேதாளத்தின் கேள்வி 

இப்போது வேதாளம் விக்கிரமாதித்தனிடம் நகுலன் அந்த பிண்டத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது?. 

மேலும் படிக்க – கொரனோவை தடுக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள்!

அதற்கு விக்ரமாதித்யன் திருமணமாவதற்கு முன்பே ஒரு பெண்ணை கர்ப்பமாக்கியது மாயனின் தவறு. மேலும் நகுலன் பிறக்கத்தான் மாயன் காரணமாக இருந்தானே தவிர, தந்தைக்கு உண்டான எந்த ஒரு கடமையையும் அவன் நிறைவேற்றவில்லை. மேலும் தான் கர்ப்பம் அடைந்ததை மறைத்து ஜெயன் என்ற இளைஞனை ஏமாற்றிய பெரும் துரோகத்தை செய்த துரோகி நகுலனின் தாய் சுகந்தி. ஆனால் ஜெயன் நகுலனை தன் மகன் என எண்ணி அவனுக்கு சிறந்த தந்தையாகவே வாழ்ந்துவந்தார். இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது ஜெயனே அந்தத் பிண்டத்தை பெறும் தகுதிக்கு ஆளாகிறான்  என்று கூறினார். இந்த விடையை கூறியதும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக் கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன