இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை…!

  • by
the place filled with natural beauty - valparai

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பிரதேசத்தை யார்தான் ரசிக்காமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு மலைப் பிரதேசம் தான் வால்பாறை. சுற்றி படர்ந்த தேயிலைத் தோட்டங்களும், கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மா மலைகளும், வற்றாத அருவிகளும் கண்காண கொள்ளா காட்சி. நீங்கள் புதிதாக திருமணம் செய்திருந்தால் நிச்சயமாக உங்கள் ஹனிமூனுக்கு ஏற்ற இடம். குளுகுளு குளுமையும், மாசில்லா காற்றும், இரைச்சல் இல்லா இடங்களும் உங்களை நிச்சயமாக மகிழ்விக்கும். 

வால்பாறை பொள்ளாச்சியில் இருந்து சுமார் இரண்டரை மணி நேரம் பயணம் செய்தால் காட்சி தரும் ஒரு அழகிய இயற்கை அன்னை. பொள்ளாச்சியில் இருந்து சுமார் அரை மணி நேரத்தில் நீங்கள் ஆழியார் என்ற இடத்தை அடைவீர்கள். அங்கு உங்களுக்கு பூங்காவும் மற்றும் ஆழியார் அணை சுற்றிப் பார்க்க ஏதுவான இடம். பின்னர் அங்கிருந்து  முதல் கொண்டை ஊசி வளைவில் நீங்கள் குரங்கு அருவியில் குதூகலமாய் குளித்துவிட்டு உங்கள் பயணத்தை தொடரலாம்.

கொண்டை ஊசி வளைவுகள்

வால்பாறையை நீங்கள் தொடுவதற்கு சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளை எட்ட வேண்டியிருக்கும். எழில் கொஞ்சும் இயற்கை உங்களை மெய்மறக்கச் செய்யும். சுமார் இரண்டரை நேர பயணத்திற்கு பிறகு நீங்கள் வால்பாறையை அடைவீர்கள். அங்கு நீங்கள் தங்குவதற்கு ஏதுவான காட்டேஜ் வசதிகளை செய்து கொள்ளலாம். குறைந்தது ஒரு மூன்று நாளாவது  வால்பாறையில் தங்கி இருந்தால் தான் நீங்கள் அந்த ஊரின் அழகை கண்டு ரசிக்க முடியும். ஏனென்றால் ஒவ்வொரு இடத்திற்கான இடைவெளி கொஞ்சம் இங்கு அதிகம்.

மேலும் படிக்க – வேலை செய்யும் இடங்களில் உங்களை எப்படி வெளிக்காட்ட வேண்டும்?

 வால்பாறை செல்லும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் இடம் பாலாஜி கோவில். வால்பாறையில் இருந்து பாலாஜி கோவிலுக்கு நீங்கள் செல்ல சுமார் அரை மணி நேரம் ஆகும். பேருந்து என்றால் இன்னும் தாமதமாகும். அழகிய ரோஜா  தோட்டங்கள் உங்களை கவரும் வண்ணத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அழகிய கண்ணாடியிலான பாலாஜி கோவில் உங்களை கவரும். அங்கேயே விநாயகருக்கு என்று திருத்தலமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

இங்கு நீங்கள் தரிசித்த பிறகு கருமலை எஸ்டேட்டில் அன்னைவேளாங்கண்ணி ஆலயத்தை தரிசிக்கலாம். இது கன்னியாகுமரி வேளாங்கண்ணி ஆலயத்தை ஒத்து கட்டப்பட்டிருக்கிறது. இங்கு வேண்டும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

வால்பாறை சுற்றுலா தளங்கள்

மேலும் இங்கு மிக சிறந்த சுற்றுலாத் தலங்களாக சின்னக்கல்லார் அருவி மற்றும் சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. 

வால்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு பகுதியாக புல் குன்று இருக்கிறது. இங்கு செல்ல வேண்டுமானால் நீங்கள் முன்னரே வனவிலங்கு துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இங்கு நீங்கள் பசுமையான புல்வெளிகளைக் கண்டு ரசிக்க முடியும்.

சோலையார் அணை ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணையாக உள்ளது. வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இந்த அணையில் பீறிட்டு வரும் வெள்ளப்பெருக்கை காண்பதற்கு ஆச்சரியமும் அதிசயமும் ஆக இருக்கும். இது வால்பாறையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும்.

வால்பாறையில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் சின்னக்கல்லார் என்னும் எஸ்டேட் அமைந்துள்ளது. அதிகமான மழைப்பொழிவு ஏற்படும் இரண்டாவது இடமான இந்த சின்னக்கல்லார் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கு உங்கள் சுற்றுலாவை ஆச்சரியமூட்டும் தொங்கு பாலம் பயணம் மிகவும் சிறந்ததாக இருக்கும். எப்போதுமே பனி மூட்டமாக காணப்படும் இந்த பகுதியை நீங்கள் நிச்சயமாக சென்று ரசித்து வாருங்கள். 

மேலும் படிக்க – ஆபிசில் நட்புடன் இருக்க இதை கவனியுங்கள்

நல்லமுடி எனும் எஸ்டேட்டில் பூஞ்சோலை எனும் இடத்தில் இருந்து பார்த்தால் கேரளாவில் மூணார்  மலை பிரதேசத்தை நீங்கள் தூரத்தில் கண்டு ரசிக்க முடியும்.ஆனால் இந்த பகுதி சிறிது ஆபத்து நிறைந்தது. எனவே முன் அனுமதி இன்றி செல்ல வேண்டாம்.

வால்பாறையில் உள்ள மற்றுமொரு அணை நீரார் அணை. இதுவும் நீங்கள் சுற்றுலாவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பகுதி. நீங்கள் பயணம் செய்யும் போதே காட்டெருமை போன்ற சில விலங்குகளை உங்களால் பார்க்க முடியும். பச்சை வண்ண  சேலை அணிந்தது போல் இயற்கை அன்னை நமக்கு காட்சி தருவார். மனதுக்கு நிம்மதியும் சந்தோஷத்தையும் தரும் ஒரு நல்ல இடம் என்றால் அது வால்பாறை எனக் கூறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன