பிரேக்ஃபாஸ்ட்க்கு என்ன சமைக்கலாம்?

some different ideas for making breakfast

அடுத்த நாள் காலையில் என்ன பிரேக்பாஸ்ட் செய்வது என்ற கேள்வி, முதல் நாள் இரவே அனைத்து இல்லத்தரசிகளின் மண்டையைக் குடையும் ஒரு விஷயம் ஆகும். தொடர்ந்து இட்லி தோசை என்ற சமைப்பதை விட குறைவான நேரத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான  உணவு தயார் செய்வது மிகவும் எளிது.

சத்தான பிரேக்பாஸ்ட் என்பது நமது அன்றாட நாளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ள தேவையான சக்தி என்றே கூறலாம். இந்த அவசர உலகில் நாம் வாழ தேவையான அடிப்படை காரணங்களில் உணவும் ஒன்று. அதற்கு நேரம் ஒதுக்காமல், ஓடி உழைத்து நாம் என்ன சாதிக்க போகிறோம்.

மூளைமற்றும் நமது தசைகளுக்கு தேவையான  ஊட்ட சக்தியை, காலை உணவை நாம் உண்பதன் மூலம் பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கிய உணவு பற்றிய குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

மேலும் படிக்க – தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

சோளம், கம்பு, பூண்டு சேர்த்த அடை 

சோளம், கம்பு, பூண்டு சேர்த்த அடை செய்ய தேவையான பொருட்கள்

சோள மாவு 1 கப் 

கம்பு மாவு 1 கப் 

பூண்டு பொடி 1 டீஸ்பூன் 

மிளகு 10 

உப்பு மற்றும் தண்ணீர் தேவைக்கு ஏற்ப

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் கம்பு மாவை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் அரைத்த பூண்டு, மிளகு மற்றும்  உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் இதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும், பின்னர் அவற்றை உருண்டைகளாக பிடித்து தட்டையாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான சூட்டில் இந்த ரொட்டியை போட்டு சுட்டெடுக்கவும். தேவை என்றால் எண்ணெய் சேர்த்து திருப்பி போட்டு சுட்டு எடுத்துக்கொள்ளலாம். மிகவும் ஹெல்தியான சோளம் கம்பு பூண்டு சேர்த்த அடை தயார்.தக்காளி சட்னி, தேங்காய் சட்னி அல்லது குருமா போன்றவற்றை சைட் டிஷ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெசிபி

சாதாரணமாக குழந்தைகள் கொள்ளு பயிறு போன்ற தானிய வகைகளை அறவே வெறுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது மிக முக்கியம் என்பது நமக்கு நன்றாக தெரியும். வெறுமனே கொள்ளு பயிறு போன்றவற்றை சமைத்து கொடுக்காமல், மாறாக இப்பொழுது நான் கூறும் முறையில் செய்து கொடுத்தீர்கள் பயறு வகைகளை வெறுக்கும் குழந்தைகள் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கொள்ளு இட்லி செய்ய தேவையான பொருட்கள்: 

கொள்ளு 1 கப் 

இட்லி அரிசி 3 கப்

வெந்தயம் 2 டீஸ்பூன் 

உப்பு தேவைக்கேற்ப

சமையல் சோடா சிறிதளவு 

செய்முறை: 

கொள்ளு மற்றும் இட்லி அரிசியை நன்றாக கழுவி சுமார் 5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

கொள்ளு மற்றும் இட்லி அரிசியை ஊற வைக்கும் பொழுது தனித்தனியாக ஊற வைத்துக் கொள்வது நல்லது. பின்னர் அரைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அரிசியுடன் சிறிது வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும். முதலில் கொள்ளு பருப்பை நன்றாக அரைக்கவும். கொள்ளு பயறு மென்மையாக அரைபடும் சமயத்தில் அரிசி சேர்த்து இரண்டையும் நன்கு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளை வைத்து நன்கு கலக்கி விடவும்’.

மேலும் படிக்க – தூங்குவதற்கு முன்பாக நாம் செய்ய வேண்டியவை..!

ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்திற்கு மாவை நன்றாக புளிக்கவிடவும். உங்களுக்கு தேவை என்றால் சமையல் சோடாவை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். சேர்க்காவிட்டாலும் தவறு ஒன்றும் இல்லை. பின்னர் எப்பொழுதும் போல் இட்லி குக்கரில் மாவை ஊற்றி சுமார் ஏழிலிருந்து பத்து நிமிடங்கள் நன்றாக வேகவைத்து எடுக்கவும், அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி. கார சட்னி வைத்து சுட சுட பரிமாறுவதுதான் பாக்கி. 

உணவின் மகத்துவத்தை அறிந்து தான் நம் முன்னோர்கள் உணவு முறைகளை கடைபிடித்து வந்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் 90 வயதிலும் தள்ளாடாமல் தன் வேலைகளை தானே செய்து கொள்ள முடிந்தது. இப்பொழுதெல்லாம் 50 வயதை தாண்டுவதே அரிதாகி விட்டது. உணவே மருந்து என்ற வாசகத்தை நிஜத்தில் கடைபிடிப்போம். பாரம்பரிய உணவுகளின் மகத்துவத்தை நம் இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன