கைகள் சிவக்கும் மருதாணியால்…….!

interesting things about mehandi

மருதாணியை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. மருதாணியை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் கைக்கு அலங்கரிக்க என்று தான் அனைத்து பெண்களும் ஒரே மாதிரி சொல்வார்கள். ஆசையாகப் பறித்த மருதாணியை நீர்விட்டு அம்மியில் மைய அரைப்பது, சென்ற தலைமுறையின் நினைவில் அழியாத கவிதை! அரைத்த மருதாணியை உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் விரும்பிய வடிவங்களில் விரல்களில் பொதித்து, அது கொடுக்கும் நிறத்துக்காக ஏக்கத்துடன் காத்திருந்து, எதிர்பார்த்த சிவந்த நிறம் மலரும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. மருதாணி வழங்கும் செவ்விய நிறத்துக்கு மயங்காத ஜீவன் இல்லை என்பது போல, அதன் குணத்துக்கு அலறாத நோய்கள் இல்லை எனலாம்! மருதாணி, அலங்காரப் பொருள் மட்டுமல்ல… நோய் நீக்கும் மூலிகையும்கூட! திருமண நிகழ்வுகள், திருவிழாக்கள் எனப் பன்னெடுங்காலமாக நம் கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்திருக்கும் மருதாணி, நோய்களை அகற்றுவதில் கில்லாடி. ஆனால், சமீபமாக மருதாணியின் பயன்பாட்டை வேதியல் ஆக்கிரமிப்பு நிறைந்த ‘மெகந்தி’ கலவைகள் குறைத்துவிட்டன.

வேதிப்பொருள்:

சாந்தோன்கள் (Xanthones), ஃப்ளேவனாய்டுகள் (Flavonoids), லுடியோலின் (Luteolin), லுபியால் (Lupeol), கொமரைன் (Coumarine) போன்ற வேதிப்பொருட்கள் மருதாணியில் நிறைந்திருக்கின்றன. மருதாணி கொடுக்கும் நிறத்துக்கு அதிலிருக்கும் லாசோன் (Lawsone) எனும் பொருள் காரணமாகிறது.

மருந்தாக: ‘சூடோமோனாஸ் அருகினோஸா’ (Pseudomonas aeruginosa) எனும் பாக்டீரியாவை அழிக்கும் வன்மை மருதாணி இலைகளுக்கு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. கல்லீரல் செல்களைப் புதுப்பிக்கவும், கல்லீரல் பாதிப்பால் ரத்தத்தில் அதிகரித்திருக்கும் சில நொதிகளைக் குறைப்பதற்கும் இதன் இலைச் சத்துக்கள் பயன்படுவதாக ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. இதன் விதைகளுக்கு நரம்பு மண்டலத்தைச் சாந்தப்படுத்தும் திறன் இருக்கிறது. பூஞ்சைகளை அழிக்கும் வன்மையும் (Fungicidal) இதன் பட்டைக்கு இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க – காலிபிளவர் கணக்கில் அடங்கா சத்துகொண்ட சைவக்காய்

வீட்டு மருந்தாக:

1.பாதங்களில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகளுக்கு மருதாணி இலைகளை அரைத்து உள்ளங்கால்களில் பூசி வரலாம்.

2.விரல்களுக்கு மருதாணி வைப்பது அழகைக் கொடுப்பதோடு, நகத்தின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக் கவசமாகச் செயல்படும்.

3.தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், மருதாணிப் பூக்களைத் துணியில் முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து உறங்கலாம். மருதாணியோடு சிறிது சுண்ணாம்பு கலந்து பூச, கூடுதல் நிறம் கிடைக்கும்.

மேலும் படிக்க – வெற்றிலையில் இருக்கும் நாம் அறிந்திராத மருத்துவ குணங்கள்.!

4.இதன் இலைக் கஷாயத்தைக் கொண்டு வாய் கொப்பளிக்க, வாயில் உண்டாகும் புண்கள் குணமாகும். தோலில் தோன்றும் வெண்படைக்கும் மருதாணியைப் பூசலாம். உடலில் ஏற்படும் தசைப் பிடிப்புகளைச் சரி செய்ய, மருதாணி இலைகளை அரைத்து அந்தப் பகுதியில் கட்டலாம். இளநரையை மறைப்பதற்குச் சிறந்த ஆயுதம் மருதாணி.

5.மருதாணி, அவுரி, செம்பருத்தி, கரிசாலை ஆகியவற்றைக் கொண்டு பக்கவிளைவு இல்லாத, இயற்கையான சாயம் தயாரித்துத் தலைமுடிக்குத் தடவலாம். இதைவிடுத்து, தரமற்ற, செயற்கையான சாய பவுடர்களை அதிக அளவில் உபயோகிப்பதால், தோலில் கரு நிறத்திலான திட்டுக்கள் தோன்றுவதோடு, கேசத்தின் வலிமையும் குறையும். முற்காலத்தில் தலைமுடிச் சாயமாக மட்டுமல்லாமல், உடலில் ஓவியங்கள் வரைவதற்கும் (டாட்டூ போல) மருதாணி பயன்பட்டிருக்கிறது.

6.வேனிற்காலத்தில் வாரம் ஒருமுறை மருதாணியை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க, தலைமுடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், உடலில் அதிகரித்த வெப்பமும் குறையும்.

7.புதிதாக செய்த மருதாணி இலை சாறு தினமும் 6 தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இவ்வாறு பத்து நாட்களுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

மேலும் படிக்க – கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்..!

8.பியூட்டி பார்லரில் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து பெடிக்யூர் ,மெனிக்யூர் எல்லாம் செய்து கொள்ளும் இன்றைய இளையதலைமுறை தலைமுறையினர், தொடர்ந்து 15 நாட்கள் இந்த மருதாணி இலையை அரைத்து கை கால் நகங்களில் வைத்து வந்தால் நகம் பளபளப்பாக மட்டுமில்லாமல், உடல் சூட்டையும் தணிக்கும். நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது இந்த மருதாணி சாயம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் ஒரு செய்தி பரபரப்பாக பரவியது. கல்யாணமாக போகும் பெண் ஒருவர் கையில் அழகுக்காக போட்டுக்கொண்டு மெஹந்தி அவருக்கு பேராபத்தை அளித்தது. செயற்கை

மருதாணியில் கலக்கப்பட்ட ரசாயனம் கைகளை புண்ணாக்கி இருந்தது. கருப்பு சிகப்பு என இரு வண்ணங்களில் போடப்படும் இந்த உடனடி ரசாயன கலவை உடலுக்கும், கைகளுக்கும் நல்லதல்ல.

நம் முன்னோர்கள் கல்யாண மணப்பெண் கைகளில் மருதாணி இடவேண்டும் என்று கூறி கூறியிருக்கிறார்கள். இதன் மருத்துவ காரணம் என்னவென்றால் கல்யாணம் ஆக விடுக்கும் பெண் உடம்பில் உள்ள அதிகப்படியான சூட்டைத் தணிக்க கல்யாணத்திற்கு முன்னாள் நாள் அவள் கைகளில் மருதாணி வைக்கப்படுகிறது. கல்யாணத்திற்குப் பின் பெண்கள் விரைவில் கருவுறுவதற்கும் , அவர்களின் உடல் தன்மை குளுமையாக இருக்க வேண்டும். அதற்கு உதவியாக இருக்கும் இந்த மருதாணி.

இவ்வளவு பயன்கள் மிக்க மருதாணியை ஒதுக்கிவிட்டு என்றோ! தயாரித்து வைத்து விற்கப்படும் ரசாயனங்கள் கலந்த பாக்கெட் மருதாணிகளை தவிர்ப்போம்…..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன