தித்திப்பான  தேன் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள்.!

  • by
interesting-facts-that-you-should-know-about-honey

நாம் இன்று அதிக அளவில்  பயன்படுத்திவரும் வெள்ளை சர்க்கரையில் உள்ள ரசாயனங்கள் நம் உடலுக்குள் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, என்பதை ஊரில் பரவியிருக்கும் பல்வேறு நோய்களைக் கொண்டே நாம் கணித்துக் கொள்ள முடியும்.

இனிப்பு என்றாலே தேனும் பனை வெல்லமும் தான் என்று உங்கள் குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். என் குழந்தை வெறும் பாலை குடிக்காது. அதில் சுவைக்காக ஊட்டச்சத்து பானங்களையும் சர்க்கரையும் கலந்து கொடுக்கிறேன் என்று கூறும் பெற்றோர்ளே நீங்கள் கலக்கிக் கொடுக்கும் பானத்தில் உண்மையான ஊட்டச்சத்து இருக்கிறதா? என்று ஒருமுறையேனும் ஆராய்ந்து பாருங்கள். இனிப்பு சுவை இல்லாமல் சாப்பிடுவதற்கு சிரமப்படும் குழந்தைகளுக்கு நாம் தித்திக்கும் தேனை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க – மருத்துவ குணம் மிக்க மல்லிகை வாழ்வுக்கு அவசியம்

தேனின் பாரம்பரியம்

சுமார் 8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் ஒரு இனிப்பு பொருள் தான் தேன். இது நம் பழந்தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளது. அவர்கள் உண்ணும் உணவில் இனிப்பு சுவைக்காக இந்த தேன் தான் பயன்படுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மருத்துவத்திலும் இதன் பயன் அதிகமாக இருந்து வந்திருக்கிறது.

தேனின் தனிச்சிறப்பு 

சர்க்கரை போல தேனும் இனிப்பு தான் என்று யோசிக்கிறீர்களா? ஆனால் இனிப்பை தாண்டியும் ஏராளமான பல நற்கூறுகளைக் கொண்டது இந்த அமிழ்தம். தேனில் 200க்கும் மேற்பட்ட நொதிகள் இரும்பு முதலான கனிமங்கள் உடன் கூடிய கூட்டு சர்க்கரை கலந்துள்ளது.

தேனீ ஆனது எந்தப் பூவின் மகரந்த த்திலிருந்து தேனை சேகரிக்கிறது அந்த மலரின் அல்லது அந்தத் தாவரத்தின் மருத்துவ குணத்தை தன்னுள் கொண்டிருப்பது தான் இந்த தேனின் சிறப்பாகும்.

தேன் ஒரு ஆன்டிபயாட்டிக் 

தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் தேனில் அந்தத் தாவரத்தின் மருத்துவகுணம் நிறைந்து இருப்பதால் தேன் ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் ஆக பயன்படுகிறது. 

குழந்தைகளுக்கு சளி இருமல் பிடித்தால் தேனுடன், இஞ்சி சாறு கலந்து குடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் நோய் தொற்று குறையும். புற்று நோயை தடுக்கும் வல்லமை கூட தேனுக்கு இருக்கிறது என்று கூறுகிறார்கள் சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள். சர்க்கரை காயத்தை அதிகரிக்கும் ஆனால் தீக்காயம் பட்ட இடத்தில் முதலில் தேனி தான் தடவ வேண்டும் என்பார்கள். அதுதான் சிறந்த முதலுதவியாக கூட இருக்கும்.

தேனின் வகைகள் 

தேன் எந்த பூவில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த பூ க்குரிய தன்மையை வைத்திருப்பதன் அடிப்படையில் தேனை நாம் வகைப்படுத்தலாம். வெட்பாலை என்னும் பூ பூக்கும் சமயத்தில் கிடைக்கும் தேனை பாலை தேன் என்பார்கள். வேம்பு பூ பூக்கும் சமயத்தில் கொஞ்சம் கசப்பாக கிடைக்கும் தேனை வேம்பு தேன் என்பார்கள். ஒவ்வொரு இடத்தை பொருத்தும் தேனின் மருத்துவ குணங்கள் சற்று மாறுபடும். பொதிகை மலை கொல்லிமலை தேனுக்கு கொஞ்சம் மருத்துவ குணங்கள் அதிகமாக தான் இருக்கின்றன. அவைகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க – வளமாக வாழ வேண்டுமா? அப்போ வாழைப்பழம் சாப்பிடுங்கள்.!

ஏனெனில் கொல்லிமலைப் பகுதிகளில் இருக்கும் மூலிகை மலரின் மூலமாக பெறப்படும் தேன் என்பதால் மற்ற தேன் களை விட கொல்லிமலைத் தேன் கொஞ்சம் விசேஷமானது தான்.

தேனை எவ்வாறெல்லாம் சாப்பிடலாம்

ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி அதாவது 10 கிராம் தேன் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தனியாக சாப்பிடலாம். அல்லது தண்ணீரிலோ, பாலிலோ கலந்து சாப்பிடலாம்.  நெல்லிக்கனி, இஞ்சி இதனுடன் சேர்ந்து தேன் கலந்து சாப்பிட்டால் அதன் பயன் இன்னும் அதிகமாக இருக்கும்.

தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

வெறும் தண்ணீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை நிச்சயமாக கூடும். ஆனால் வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஒரு மிக முக்கிய விஷயம் என்னவென்றால் அதிக வெப்பநிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறு சேர்ப்பதால் தேன் மகத்துவத்தை அந்த அதிக சூடான பொருள் நிச்சயமாக குறைக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?

மற்ற இனிப்பு பண்டங்களை காட்டிலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் சற்று குறைவாக தான் இருக்கிறது தேனில். ஆனால் சில வகை தேன்களில் இது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது. தேன், வெல்லம் ,கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்கள் இவை அனைத்தையுமே சர்க்கரை வியாதி வந்தால் சாப்பிடாமல் இருப்பது கொஞ்சம் நல்லதுதான்.

உலக பிரசித்தி பெற்ற தேன் எது?

நியூசிலாந்தில் உள்ள மனுக்காத்தேன். இதுதான் உலகப் பிரசித்தியான தேன். இந்த 100 கிராம் தேன் 3000 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தேன்தான் எங்கள் நாட்டின் அமிர்தம் என்று பெருமிதம் கொள்கிறது அந்த நியூசிலாந்து அரசு.

மேலும் படிக்க – திவ்விய மூலிகை திருநீற்றுப்பச்சிலை அறிவேமா

உண்மையான தேனை எவ்வாறு கண்டறிவது? 

இப்போதெல்லாம் தேன் என்ற பெயரில் வெல்லபாகு அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதை சாப்பிடுவதால் நமக்கு எந்த மருத்துவ பயனும் கிடைக்கப்போவதில்லை. இதை கண்டறிய ஒரு காகிதத்தில் இரண்டு துளிகள் தேன் விட வேண்டும். அதை ஒரு ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால், நாம் காகிதத்தில் வைத்தது உண்மையான தேன் என்றால் அது அப்படியே இருக்கும். ஆனால் சர்க்கரை பாகாக இருந்தால் காகிதம் ஈரமாக மாறியிருக்கும். மேலும் குளிர்ச்சியான நீரில் உண்மையான தேன் கரையாது அடியில் அப்படியே தங்கி இருக்கும், வெல்லபாகாக இருந்தால் நீரில் கரைந்து இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன