கொரோனா வைரஸினால் ஏற்படும் பதற்றத்தை எப்படி குறைப்பது..!

  • by
how to reduce the tension of corona virus

உலகம் முழுக்க எல்லோர் மனதிலும் மிகப்பெரிய பயத்தை உருவாக்கிய வைரஸ் தான் இந்த கொரோனா. இதற்கு பயப்படாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது, அதிலும் பல பேர் இதை தினமும் நினைத்து தங்கள் தூக்கத்தை இழந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சாதாரண பயமாக துவங்கிய இந்த கொரோனா நாளடைவில் உங்கள் மனதையும் மற்றும் உடலின் ஆரோக்கியத்தையும் குறைத்துவிடும். இதன் மூலமாக உங்கள் எதிர்ப்பு சக்தியும் குறைய வாய்ப்புள்ளது. எனவே கொரோனா பற்றிய பயத்தை துறந்து ஆரோக்கியமாக வாழும் வழிகளை இந்த பதிவில் காணலாம்.

நம்பகத்தன்மை இல்லாத ஊடகம்

கொரோனா வைரஸ் பற்றிய தெளிவான மற்றும் உண்மையான செய்திகளை மட்டும் காணுங்கள். இதைத் தவிர்த்து சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சியும் பின்தொடரதீர்கள், ஏன்என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியில் ஒவ்வொரு விதமான செய்திகளை தங்கள் டிஆர்பி ரேட்டிங்கிற்க்காக அவர்களுக்கு தோன்றுவதை எல்லாம் சொல்வார்கள். இதைத் தவிர்த்து தேவையில்லாத செய்தியைக் கூட தேவையானதாக மாற்றுவதற்கு கொரோனா வைரஸை பயன்படுத்துவார்கள். எனவே உங்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய தொலைக்காட்சியை மட்டும் பாருங்கள். அதையும் காலை அல்லது மாலை சிறிது நேரம் பார்த்து கொரோனா பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள். இதைத் தவிர்த்து எல்லாவற்றையும் பின்தொடர்ந்தால் நிச்சயம் உங்களுக்கு பதற்றம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – சித்த மருத்துவத்தால் கொரோனா வைரஸை தடுக்க முடியுமா..!

சமூக வலைத்தளம்

ஊடகத்திற்கு அடுத்தபடியாக வதந்திகளை பரப்பும் பாலமாக இருப்பது சமூக வலைத்தளங்கள் தான். சமூக வலைத்தளத்தின் தூண்களாக இருக்கும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் மூலமாக ஏராளமான தவறான செய்திகள் வெளியாகிறது. எனவே இதில் பரப்பப்படும் அனைத்து செய்திகளையும் உண்மை என்று நம்பாமல் அதை ஆராய்ந்து மற்றவர்களுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு வரும் செய்திகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை பகிர்வதை முழுமையாக தவிர்த்திடுங்கள். இதையும் மீறி நீங்கள் வதந்திகளை பரப்பினால் அதற்கான தண்டனை நிச்சயம் உங்களுக்கு அரசாங்கம் அளிக்கும். இதை தவிர்த்து நீங்கள் இது போன்ற வதந்திகளை மட்டும் படிப்பவராக இருந்தால் அதை நினைத்து கவலை படாமல் இருந்தாலே போதும் உங்கள் மன பதற்றம் குறையும்.

பாதுகாப்பாக இருங்கள்

ஒரு சிலருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோமா என்ற சந்தேகத்தினால் அவர்களின் மனம் பதற்றமாக இருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் வெளியே செல்பவர்களாக இருந்தால் சமூக இடைவெளி விட்டு ஒவ்வொரு வருக்கும் இடையே கிட்டத்தட்ட ஆறு அடி வரை இடைவெளி விட்டு செல்லுங்கள். எதிர்பாரத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி விட்டாலும் உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் கைகள், கால்கள் கழுவுவது அவசியம் மற்றும் உங்கள் உடைகளை சுத்தப்படுத்திவிட்டு வீட்டிற்குள் செல்வது மிக முக்கியம்.

பயத்தை எழுதுங்கள்

கொரோனா வைரஸினால் உங்களுக்கு ஏற்படும் பயங்களை பட்டியலிட்டு அதை ஒவ்வொன்றாக கடந்து வரும் முயற்சி செய்யுங்கள். அப்படி உங்களால் கடந்து வர முடியவில்லை என்றால் எழுதப்பட்ட காகிதத்தை உங்கள் எதிரி என்று நினைத்து அதைக் கிழித்து எரித்துவிடுங்கள். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் பயங்கள் வெகுவாக குறையும். அதேபோல் உங்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து எப்படி விடுபடலாம் என்று யோசியுங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான யோசனையை கொண்டு உங்கள் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இறுதியில் உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து உங்களின் சிந்திக்கும் திறனைனும் அதிகரிக்கும்.

நண்பர்களுடன் உரையாடுங்கள்

கொரோனா வைரஸ் மக்களின் மனப் பதற்றத்தை இயற்கையாகவே அதிகரிக்கும். இதை தடுப்பதற்கு நாம் முதலில் தனிமையை தவிர்க்க வேண்டும். அப்படி வேறு வழி இல்லாமல் நீங்கள் தனிமையில் இருக்கும் நபராக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் உரையாடுங்கள். தேவைப்பட்டால் உங்கள் நண்பர்களுடன் காணொளி அழைப்பை மேற்கொள்ளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியினால் நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட காணொளி அழைப்புகளை நம்முடைய செல்போன் செயலிகள் மூலமாக மேற்கொள்ள முடியும். என வெவ்வேறு நகரங்களில் இருக்கும் உங்களுக்கு பிடித்த மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உரையாடுங்கள். இந்த செயல் உங்களை வலிமைப்படுத்தி உங்கள் பதட்டத்தை குறைக்கும்.

இயற்கையுடன் ஒன்றி வாழுங்கள்

அக்கால மனிதர்கள் எப்படி தொழில்நுட்பங்களை நம்பாமலும் இயற்கையை சார்ந்து வாழ்ந்தார்களோ அதே போல் நாமும் இயற்கையை சார்ந்து வாழ வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுக்க இருக்கும் மக்கள் அவரவர் வீட்டிற்குள் அடைந்து இருக்கிறார்கள். இதன் மூலமாக பறவைகள், விலங்குகள், சுதந்திரமாக வெளியே சுற்றுகிறது. இதைத் தவிர நம்மால் உருவாக்கப்படும் மாசுகள் அனைத்தும் குறைந்த காற்று தூய்மையாக இருக்கிறது. இது போன்ற நேர்மறை சிந்தனைகளை உருவாக்கி உங்கள் பதட்டத்தை குறையுங்கள். அதேபோல் நீங்கள் சமையலுக்கு வாங்கி வரும் காய்கறிகளில் இருக்கும் விதைகளை எடுத்து மாடித் தோட்டத்தை அமைத்திடுங்கள். காலையில் எழுந்து அதற்கான நீர் ஊற்றுதல், பராமரித்தல், பாதுகாத்தல் போன்ற வேலைகள் உங்கள் பதட்டத்தை குறைக்கும்.

மேலும் படிக்க – உங்கள் வீட்டில் நீங்கள் செய்ய வேண்டிய கடமை..!

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்

இதுவரை உங்களுக்கு தெரியாத ஏதாவது ஒரு செயலை இந்த இடைவெளியில் கற்றுக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு ஏதேனும் ஒரு இசைக்கருவி மேல் ஆர்வம் அதிகமாக இருந்தால் அதை யூட்டியுப் வழியாகக் கற்றுக் கொள்ளுங்கள். இனயதளத்தில் ஏராளமான பயிற்சிப் பட்டறைகள் இருக்கின்றன. எனவே உங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து அதை நீங்கள் முழுமையாக கற்றுக்கொள்ளலாம்.

உங்கள் மன பதட்டத்தைப் போக்கும் ஏராளமான வழிகள் உங்களிடம் உள்ளது. எனவே சிறிது நேரம் அமைதியாக உங்களை பற்றி யோசித்துப் பாருங்கள், நிச்சயம் உங்கள் மன அமைதிக்கான வழி உங்களுக்குள் தோன்றும். அதைப் பின்தொடர்ந்து உங்களையும் உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன