உங்கள் திறமையை கண்டுபிடிப்பது எப்படி?

  • by
how to find out your talent

வெற்றி தோல்வி என்பது எல்லோரின் வாழ்க்கையிலும் இருக்கும், ஆனால் ஒரு சிலர் எந்த ஒரு முயற்சியையும் செய்யாமல் தோல்வி குகைக்குள்ளே அடங்கி உள்ளார்கள். இவர்கள் வாழ்க்கை முழுக்க எதிர்மறை எண்ணங்களை கொண்டதாகவே இருக்கிறது. உண்மையில் எல்லோர் வாழ்க்கையிலும் அவரவர் திறமைக்கு ஏற்றார் போல் ஏதாவது ஒரு வேலை இருக்கும். எனவே உங்களின் திறமையை அறிந்து அதற்கேற்ப நாம் எப்படி முன்னேறலாம் என்ற எண்ணம் உங்களுக்குள் தோன்ற வேண்டும். இதனால் மற்றவர்களின் பார்வையில் நீங்கள் ஒரு வெற்றி பெற்றவராக இருக்க முடியும்.

படிப்பில் ஏற்படும் ஆர்வம்

உங்களின் திறமையை அறிய வேண்டுமென்றால் ஒரு சில எளிய வழிகள் இருக்கின்றன. நீங்கள் படிக்கும் பொழுது எந்த பாடம் உங்களுக்கு எளிமையாக அமைந்தது, அந்தப் பாடத்தில் எந்தப் பகுதி உங்களை மிகவும் கவர்ந்தது, இன்று வரை உங்கள் மனதில் மறக்காமல் இருக்கும் பாடங்கள் என்ன என அனைத்தையும் யோசியுங்கள். உங்களால் எளிமையாக சாதிக்கக் கூடிய ஒரு சில வழிகள் உங்களின் ஆரம்ப காலத்திலேயே உருவாகிவிடுகிறது. எனவே உங்கள் ஆரம்பகால படிப்பில் உங்களின் ஆர்வம் எதில் மேலதிகமாக இருந்ததோ அதை பின்தொடர்ந்து உங்கள் திறமையை வெளிக்காட்டுங்கள்.

மேலும் படிக்க – சேமிப்பை பின்பற்றி செழிப்புடன் வாழ்வோம்

எளிமையான வேலைகள்

பலருக்கு கடினமாகத் தெரியும் வேலைகளை நீங்கள் எளிமையாக முடித்தீர்கள் என்றால் அதுதான் உங்களின் திறமை. ஒரு சிலருக்கு படிக்கவும் எழுதவும் பிடிக்காது, ஆனால் அதன் மேல் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதைப்போல் ஒரு சிலருக்கு கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி என்று தெரியாது, ஆனால் உங்களால் மிக எளிதில் அழகாக கைவினைப் பொருட்களை செய்ய முடியும். இது போன்ற செயல்கள் தான் உங்கள் திறமைகள். எனவே அதை அறிந்து அதை மேம்படுத்துங்கள்.

தொழில்களை செய்யுங்கள்

ஒரு சிலருக்கு தொழில்கள் மேல் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் அவர்கள் என்ன தொழில் செய்வது என்று தெரியாமல் திணறி வருவார்கள். இது போன்றவர்கள் தங்கள் வாழ்நாளில் எந்த ஒரு பொருள் தேவை அதிகமாக இருந்து அது உங்களுக்கு கிடைக்க வில்லையோ அந்தப் பொருள் சம்பந்தப்பட்ட தொழிலை உருவாக்குங்கள். இது போன்ற தொழில்களில் உங்களின் அனுபவத்தை அதிகரித்து உங்கள் திறமையை வெளிக்காட்டுங்கள்.

கற்றுக்கொள்ளுங்கள், கற்றுக்கொடுங்கள்

உங்களுடைய திறமை போதுமான அளவு இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் அந்த திறமையை வலுப்படுத்துவதற்காக மேலும் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை கற்பதற்காக நாம் என் நிலையிலும் கீழ் நோக்கி செல்லலாம், அதில் எந்தத் தவறும் இல்லை. அப்படி சென்றால் மட்டுமே நாம் விண்வெளி அளவிற்கு மேல் நோக்கி உயர முடியும்.

உங்களிடம் இருக்கும் திறமைகளை உங்கள் குழந்தைகள் அல்லது தெரிந்தவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். இதன் மூலமாக உங்கள் திறமை அதிகரிக்கும், உங்களால் அவர்களும் பயன் பெறுவார்கள்.

மேலும் படிக்க – வேலை செய்யும் இடங்களில் உங்களை எப்படி வெளிக்காட்ட வேண்டும்?

திறமையும் சாதனையும்

உங்களின் திறமையை வைத்து சாதனை செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு சிலர் வாகனம் ஓட்டுவதில் சிறந்தவராக இருப்பார், ஒரு சிலர் விளையாட்டுத் துறைகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள், அதேபோல் ஓவியம் வரைவதில், எழுதுவது, பேசுவது, நகைச்சுவை என உங்களுக்கு தெரிந்தவைகளை வைத்து ஏதேனும் சாதனைகள் செய்ய முடியுமா என்பதை பாருங்கள். இதன் மூலமாக உங்கள் திறமை உலக வெளிச்சத்திற்கு வரும் உங்களைப் பின்தொடர்பவர்களும் வெற்றி அடைவார்கள்.

தன்னால் எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவரின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பயனாக தான் இருக்கிறார்கள். எனவே உங்களிடம் இருக்கும் திறமையை அறிந்து அதை சரியான இடத்தில், சரியான நேரத்தில் வெளிக்காட்டுங்கள். நிச்சயம் உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை தோன்றி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன