கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

how love should be expressed between husband and wife

கணவன் மனைவி உறவு என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உடல் மற்றும் மனரீதியாக என்றும் இணைந்திருக்கும் உறவு. ஆரம்பத்தில் இவர்களின் உறவு அழகாக இருந்தாலும் காலங்கள் செல்ல செல்ல இவர்களுக்குள் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுகிறது. ஒரு சிலர் திருமணம் ஆன சில வருடங்களிலேயே தங்கள் காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விடுகிறார்கள். பிறகு வேறொரு துணையை தேர்ந்தெடுத்து மீண்டும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

உறவில் அன்பு மற்றும் காதல் குறைபாடினால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. யார் ஒருவர் மிக கடினமான சூழ்நிலைகளில் தங்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் அன்பிற்கு முக்கியத்துவம் தருகிறார்களோ அவர்களின் வாழ்க்கைதான் கடைசிவரை காதலுக்கு உதாரணமாக இருக்கும். ஆனால் இப்போது இருக்கும் பெரும்பாலான தம்பதியினருக்கு சகிப்புத்தன்மை என்பது துளியும் இல்லை இதனால் எடுத்த உடன் சண்டைகள் ஏற்படுகிறது. இது அனைத்தையும் தவிர்த்து உங்கள் உறவில் அன்பு மற்றும் காதல் இருக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க – காதல் கல்யாணத்திற்கு பின்பும் தொடர உதவும் மூன்று விஷயங்கள் இவை தான்!

கணவன் மனைவி இருவரும் தங்களின் நாள் எப்படி சென்றது என்பதை மனம் விட்டு பேசுங்கள். அதுபோல் பேசும்போது நீங்கள் சிறந்தவர் என்பதை சொல்லாமல் எல்லாம் பொதுவாக சாதகமாக நடக்கிறது என்று சொல்லுங்கள். உறவுகளில் யார் பெரியவர்கள், யார் சிறந்தவர்கள் என்ற கணக்கை நாம் பார்க்கக்கூடாது. இருவரும் சரிசமம் என்ற உணர்வை உங்கள் துணைக்கு புரியவையுங்கள். இதனால் உங்கள் துணை உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள்.

முடிந்தவரை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருங்கள். ஆரம்பத்தில் இதனால் சண்டைகள் ஏற்பட்டாலும் உங்கள் நேர்மை பற்றி உங்கள் துணைக்கு புரிய வையுங்கள். நாளடைவில் உங்களுக்குள் எந்த ஒரு ரகசியமும் இல்லாமல் உங்கள் வாழ்க்கை அற்புதமாக மாறும். அதையும் மீறி ஏதாவது சண்டைகள் ஏற்பட்டால் உடனடியாக சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள் எதை யார் முதலில் செய்கிறார்களோ அவர்கள் காதல் சிறந்தது என்பதை உணர வையுங்கள்.

பொது இடங்களில் அல்லது உறவினர்கள் மத்தியில் உங்கள் துணையை பற்றி பேசாதீர்கள் இதற்கு மாறாக நீங்கள் அவர்கள் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கும் என்பதை காண்பியுங்கள். பணி நேரங்கள் முடிந்த பின்பு வாரத்திற்கு ஒரு நாள் வெளியே செல்வதை வழக்கமாக கொள்ளுங்கள். மாதம் அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஏதாவது சுற்றுலா செல்லுங்கள். இது உங்கள் காதலை புதுப்பிக்க உதவும்.

மேலும் படிக்க – விருப்பங்களை பகிர்ந்து பந்தங்களை பலப்படுத்துங்கள்

உண்மையான காதல் வெளிப்பாட்டின் மூலமாக உடலுறவு கொள்ளுங்கள். உடல் தேவைக்காக உடலுறவு கொள்வதை தவிருங்கள். உங்கள் துணை ஏதாவது வேலையை சொன்னால் அதில் குறை கண்டுபிடிக்காமல் உடனே அதை செய்து முடியுங்கள். இவர் சொல்லி நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை தீயிலிட்டு கருகி விடுங்கள்.

உங்கள் உறவை மற்றவர்கள் பாதிப்படைய செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மூன்றாம் நபர்களினால் உங்கள் உறவில் சண்டைகள் ஏற்பட்டால் அந்த சண்டையை தவிர்த்திடுங்கள். எப்போதும் கணவன் மனைவிக்கு உள்ள கருத்து வேறுபாடுகளினால் தான் பிரச்சினைகள் ஏற்பட வேண்டும். இதைத்தவிர்த்து சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபர்களை காரணம்காட்டி சண்டையிட்டால் அந்த உறவில் மிக விரைவில் விரிசல் ஏற்படும்.

ரொமான்டிக்காக இருக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் இருக்கிறது, திருமணம் ஆகி பல வருடங்கள் கழிந்து விட்டது என்ற சாக்குகளை சொல்லாமல் எப்போதும் ரொமான்டிக்காக இருங்கள்.

ஒரு சிலர் தங்கள் காதல் ஆழத்தை வெறும் சமூக வலைத் தள நண்பர்களுக்காக மட்டுமே பகிர்வார்கள். இது நாளடைவில் உங்களுக்கு மன நோயை உண்டாக்கும். இதனால் உறவுக்குள் சந்தோஷத்தை தேடாமல் மற்றவர்கள் பார்வையில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். எனவே இதைத் தவிர்த்து உங்கள் காதலை நீங்கள் முழுமையாக ரசித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள். பின்பு தானாகவே மற்றவர்களுக்கு உங்கள் உறவின் வலிமை தெரியவரும்.

அடுத்தவர்களுக்காக வாழ்வதைத் தவிர்த்து உங்களுக்காக வாழுங்கள். ஒருசில ஆண்கள் தங்கள் முன்னாள் காதலியை வெறுப்பேற்றுவதற்காக,தான் அழகான வாழ்க்கை வாழ்கிறேன் என்று பதிவுகளை மேற்கொள்வார்கள். அதேபோல் ஒரு சில பெண்கள் தங்களின் பெற்றோர்களை சந்தோஷத்திற்காக இதுபோன்ற செயல்களை செய்வார்கள். இது அனைத்தையும் தவிர்த்து இது உங்கள் உங்கள் குடும்பம், அதை எப்படி மேம்படுத்துவது, எப்படி உங்கள் காதல் மற்றும் அன்பை வெளிப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தி ஒரு முழுமையான வாழ்க்கையை வாழுங்கள்.

மேலும் படிக்க – குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்..!

சிறுவயதில் நாம் செய்யும் தவறுகள் இளம் வயது வரும் வரை நமக்குத் தெரிவதில்லை. அதேபோல்தான் முதுமை வரும் வரை நமது இளம் வயதில் என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்பதை நாம் அறியப் போவதில்லை. எனவே செய்யும் செயலை சரியாகச் செய்கிறோமா என்பதை ஒருமுறைக்கு பலமுறை கேள்விகளைக் கேட்டுக்கொண்டு உங்கள் வாழ்க்கைத் துணையை மதித்து அவர்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள். சுயநலம் என்பது உங்களை சார்ந்தது அல்ல உங்கள் குடும்பத்தை சார்ந்தது என்பதை உணர்ந்து உங்கள் துணையை மதியுங்கள். இதனால் கணவன் மனைவிக்குள் காதல் பரிமாற்றம் அற்புதமாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன