மன அழுத்தமாக உணர்கிறீர்களா? உங்கள் மன அழுத்தத்தை கையாள உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்…!

  • by

மன அழுத்தம் இன்று பலரும் எதிர்கொண்டு வரும் மிக முக்கிய பிரச்சனைகளில் முதன்மையானது. பள்ளி, கல்லூரி, பணியிடம், வீடு என எங்கும், யாவர்க்கும் இந்த மன அழுத்தம் மிகப்பெரும் அச்சுறுத்தலை நாள்தோறும் வழங்கி வருகிறது. இது உங்கள் உடல் மற்றும் உள் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் தீங்கை விளைவிக்கும். உறக்கமின்மை ஏற்பட்டு உங்களின் செயல்பாட்டை வெகுவாக குறைத்திடும், நீங்கள் தொடர் மன அழுத்தத்தில் இருந்தால், நாள்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். இதனால் உடல் எடை இழப்பு, எடை அதிகரிப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், மோசமான செரிமான அமைப்பு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள், மற்றும் பல ஆபத்துகள் ஏற்படலாம்.

இதிலிருந்து உங்களை பாதுகாக்க இங்கு நாங்கள் உங்களுக்காக வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள்/ஆலோசனைகளை மேற்கொண்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள்.

நீங்கள் மன அழுத்தமாக உணரும்போது துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது முக்கியம் மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள நான்கு முக்கியமான செயல்கள் உங்களை மன அழுத்தத்திலிருந்து மீளச் செய்யும்.

மேலும் படிக்க-> ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

வாழ்க்கையில் நல்லவற்றை கவனிக்க முயற்சி செய்யுங்கள்:

மன அழுத்தம் ஒரு நபரின் எண்ணங்களை பாதிக்கிறது, அனைத்தையும் மோசமானதாகவும், எதிர்மறையாகவும், நம்பிக்கையற்றதாகவும் ஆக்குகிறது. மன அழுத்தம் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த சிறந்த பரிசுகள், பாராட்டுகள், ஆசிகள் என மனதிற்கு இதமானதை நினைத்து அடிக்கடி உள்ளபடியே மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
இயற்கையை கவனியுங்கள், பறவைகளின் சப்தம், காற்றின் இசை, மழையின் அழகு என அனைத்தையும் கவனியுங்கள், உங்களுக்குள் புது வித ரத்தம் பாயும்.

உடற்பயிற்சி மற்றும் தியானம்:

தினமும் 15-30 நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயணத்தை மேற்கொள்ளுங்கள் – அல்லது நீங்கள் விரும்பினால் நடனம், ஓட்டம் அல்லது சைக்ளிங் செய்யலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் மனநிலையில் ஒரு வித்தியாசத்தைக் கவனிக்க முடியும்.

யோகா போன்றவற்றை குழுவாகவோ அல்லது தனியாகவோ செய்திடுங்கள், தியானம் மிக முக்கியமானது. இதனை நீங்கள் விடாமல் மேற்கொண்டு வந்தால் நிச்சயம் உங்களில் பெருமாற்றம் ஏற்படும். உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை வீட்டிலிருந்தே மேற்கொள்ளுங்கள் மாற்றத்தை காணுங்கள்.

பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு கான முற்படுங்கள்:

உங்கள் மன அழுத்தத்திற்கு காரணமான எந்த சூழ்நிலையையும் அடையாளம் காண முயற்சிக்கவும். பின்னர் உங்கள் மேல் அக்கறையுள்ள நண்பருடன் இதைப் பற்றி பேசுங்கள். பிறரிடம் மனம் விட்டு பேசுவது என்பது உணர்வுகளை விடுவிப்பதற்கும் சில புரிதல்களைப் பெறுவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியவுடன், உங்கள் கவனத்தை நேர்மறையான செயல் ஒன்றுக்குத் திருப்புங்கள். பிரச்சினைகளை தீர்க்க முற்படுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் பிறரின் உதவி கேளுங்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.

மேலும் படிக்க-> யோகா சிகிச்சையும் தியான பயிற்சியின் விளைவுகளும்…!

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு/காய்கறிகள்/ பழங்களை உண்ணுங்கள்:

மன அழுத்தம் ஒருவரின் பசியை வெகுவாக பாதிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் சரியான ஊட்டச்சத்தைப் பெறுவதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சரியான ஊட்டச்சத்து ஒரு நபரின் மனநிலையையும் ஆற்றலையும் மேம்படுத்தும், எனவே நல்ல பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுங்கள் வழக்கமான உணவைப் பெறுங்கள் (உங்களுக்குப் பசி இல்லை என்றாலும், ஆரஞ்சு, ஆப்பிள், போன்ற பழத்தின் ஒரு துண்டையாவது சாப்பிட முயற்சி செய்யுங்கள்)

மேற்சொன்னவையாவும் மேற்கொண்டால் உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பழகுங்கள், உங்கள் குடும்பத்தினருடன் பொழுதுகளை கழியுங்கள், வீட்டில் உள்ள வேலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், செடிகொடிகளை நட்டு அவற்றை பராமரியுங்கள், காக்கை, குருவி போன்ற ஜீவன்களுக்கு தினமும் உணவளியுங்கள். நேர்மறை எண்ணம் எப்போதும் உங்களை மகிச்சியாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க-> நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன