தூக்கமின்மையால் இவ்வளவு பிரச்சனைகளா???

  • by
effects of not having proper sleep

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் படுக்கையில் படுத்திருக்கும் தாத்தா பாட்டிகள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது தூக்கமின்மை. தினமும் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறங்குவது தான் நல்ல உறக்கம்.

திடீரென்று இரண்டு வாரங்களுக்கு மேலாக தூக்கமே வரவில்லை என்றால் அல்லது சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் என்றால் அவருக்கு தூக்கமின்மை பிரச்சனை உள்ளது என்று பொருள். இதற்கான காரணங்களையும் தீர்வையும் விளக்கும் பதிவு தான் இது.

தூக்கம் குறைவதற்கான காரணம் என்ன?

இன்று நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கம் முறையே தூக்கமின்மைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றைய இளைய சமுதாயம் மூன்று நேரமும் கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுகின்றனர். இதனால் உணவு செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – கரேனா வைரஸ் இந்தியவை அதிகமாக தாக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் செய்ய வேண்டியவை..!

செரிமானத்துக்கு வயிற்றுப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வதும், தூக்கத்தை தாமதப்படுத்தும் ஒரு முக்கிய காரணமாகும்.

நள்ளிரவு வரை தொலைக்காட்சி பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் நேரத்தை தொலைத்துவிட்டு தூங்க செல்லும் பலருக்கும் இந்த தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது. உடலில் இயற்கையாக அமைந்திருக்கும் சுழற்சியை பாதிக்கிறது. குடும்ப சுமை, பணிச்சுமை, மனக்கவலை அடிக்கடி நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வது, வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள், இழப்புகள் இவை அனைத்துமே தூக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மன அழுத்தம், மனசிதைவு, மனச்சோர்வு குற்ற உணர்ச்சி, பயம், பதற்றம் போன்ற காரணங்களாலும் தூக்கம் குறைவது நிச்சயம்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களும், போதை ஊசி போட்டுக்கொள்வது புகைபிடிப்பது போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கும் இந்த இரவு தூக்கம் தடைபடுகிறது.

தூக்கமின்மையால் ஏற்படும் நோய்கள் எவை?

நம் உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக செயல்பட கடவுள் கொடுக்கும் ஒரு புத்துணர்ச்சி பானம் போல தான் தூக்கம் செயல்படுகிறது. அதை நாம் தொலைத்து விடுவதால் நீரிழிவு,
இதயநோய்
உயர் ரத்த அழுத்தம்
ஆஸ்துமா 
உடற்பருமன் 
செரிமானக் குறைபாடு 
கல்லீரல் பாதிப்பு 
சிறுநீரகப் பிரச்சனை 
புரோஸ்டேட் வீக்கம்
புற்றுநோய் 
ஒவ்வாமை 
மூளை சார்ந்த நரம்பு பிரச்சனை மூக்கடைப்பு 
தூக்கத்தில் சுவாசத் தடை 
தசைநார் வலி ஆகியவை இந்த தூக்கமின்மைநோயில் முக்கிய இடம் பெறுகின்றன.

தூக்கம் வருவதற்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லதா? 

தூக்கத்தில் பல்வேறு தடைகள் இருப்பதால் அதை சரி செய்ய பலர் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். அது முற்றிலும் தவறானது ஏனெனில் நாம் சாப்பிடும் மாத்திரை கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவதால் சிறுநீரகமும் கல்லீரலும் அதிக பாதிப்படைகிறது. மூளை நரம்புகள் பாதித்து அதிக மறதியும் ஏற்படும்.

நமக்கு எந்த காரணத்திற்காக தூக்கமின்மை ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து மருத்துவரின் ஆலோசனையை கேட்டு மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

ஆரோக்கியமான தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? 

எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்ந்து எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்குவது தான் ஆரோக்கியமான தூக்கம்.

இரவு உணவை 8 மணிக்கு சாப்பிட்டுவிட வேண்டும். அதன்பின் நிறைய தண்ணீர் அருந்திவிட்டு சாப்பிட்டு, இரண்டு மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும். சிலருக்கு தூங்குவதற்கு முன்பாக குளிக்கும் பழக்கம் இருக்கும் அவ்வாறு குளிப்பவர்கள் , தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே குளித்துவிட வேண்டும்.

இரவில் அதிக காரமான மசாலா புளிப்பு, இனிப்பு ,கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்த்துவிட்டு எளிதில் ஜீரணமாகக்கூடிய ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

காபி மது பானங்கள் போன்றவை தூக்கத்தை தடை செய்யும். இதற்கு பதிலாக பால், பழம் சாப்பிடலாம். சிலருக்கு புத்தகம் படித்தால் தூக்கம் வரும் சிலருக்கு இசையை கேட்டால் தூக்கம் வரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க – நம்மைச் சுற்றி உள்ள காற்றை சுத்தப்படுத்தும் வழிகள்..!

பகலில் எவ்வளவு நேரம் தூங்கலாம்?

பகலில் அதிகபட்சமாக 45 நிமிடம் ஒரு குட்டித்தூக்கம் தூங்கலாம். ஆனால் முதியவர்களும் இரவில் நெடுந்தூரம் தூக்கம் வரவில்லை என்று சொல்பவர்களும் பகலில் தூக்கத்தை தள்ளிப் போடுவது அல்லது தவிர்ப்பதே நல்ல பழக்கம்.

படுக்கை அறை எவ்வாறு இருக்க வேண்டும்?

படுக்கையறை நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் இருந்தால் நல்லது. அங்கே அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. ஏனெனில் வெளிச்சத்தின் போது மூளைக்கு தேவைப்படும் மெலனின் எனப்படும் சுரப்பி சுரக்காது. அதிக சத்தமும் இருக்கக்கூடாது. தூங்குவதற்கும் மட்டுமே படுக்கையறையை பயன்படுத்துங்கள். வேறு பணிகளுக்கு அது உகந்த இடமாக எப்போதும் இருக்காது. முக்கியமாக கண்களை மூடும் போதே கவலைகளையும் சேர்த்து மூடினால் தான் சுகமான தூக்கம் வரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன