ஐயப்பன் தோன்றியதன் ரகசியம்!!!

  • by
birth secret of lord ayyappa

ஐயப்பனின் பிறப்பு 

கேரளாவை ஆண்ட பந்தள மகாராஜா குழந்தை பாக்கியம் இல்லாமல் மனம் வருந்தி இருந்தார். அதே நேரத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். இந்த அரக்கியை அழிப்பதற்காக பிறந்தவர் தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்து அதன் பிறகு சிவனுடன் கூடி பிறந்தவரே ஐயப்பன்.

இந்த குழந்தையை பந்தள அரசனிடம் ஒப்படைப்பதற்காக காட்டிலேயே விட்டுவிட்டு சென்று விட்டனர் சிவபெருமானும், மோகினியான விஷ்ணு பெருமானும். மிகப்பெரும் பக்திமானான பந்தள மகா ராஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்ப்பதற்காகவே இவர்கள் இவ்வாறு செய்தனர்.

அந்த சமயத்தில் காட்டுக்கு வேட்டைக்கு வந்த பந்தள மகாராஜா குழந்தையின் அழுகுரல் கேட்டு பதைபதைத்து குழந்தையை தேடினார். அப்போது அந்த குழந்தை ஒரு மரத்துக்கு அடியில் மிகவும் ஜொலிக்கும் தேகத்துடன் காணப்பட்டதை பார்த்தார். அப்போது அவர் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாதை அறிந்து தெய்வமாகவே இந்த குழந்தையை அளித்து இருப்பதாக எண்ணி அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். 

மேலும் படிக்க – அர்ஜுனன் மற்றும் அனுமனுக்கு இடையே நடந்த போட்டி!!!

தெய்வ கடாக்ஷம்

இதை அறிந்த மகாராணியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். மகாராணியும் மகாராஜாவும் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. குழந்தையின் அழகில் அங்கிருந்த அனைவரும் மெய்மறந்து போனார்கள். அங்கு இருந்த அரசாங்க ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வ கடாக்ஷம் பொருந்திய குழந்தை என்று கூறினர். இந்தக் குழந்தையின் கழுத்தில்மணி இருந்ததால் இந்த குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிடலாம் எண்ணி அதே பெயரையே சூட்டினர். அதன்பிறகு ஐயப்பனான மணிகண்டனை பாராட்டி சீராட்டி வளர்த்தனர். 

சூது 

இந்த சமயத்தில்தான் மகாராணி கருவுற்றார். மணிகண்டன் வந்த நேரம் தான் இந்த பாக்கியம் என எண்ணி அரசனும் அரசியும் மகிழ்ந்தனர். மகாராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.  அந்தக் குழந்தையும் மணிகண்டனும் வளர்ந்து வந்தனர். ஆனால் எப்போதுமே நல்வினைகள் நடக்கும் இடத்தில் தீவினைகளும் இருக்கும் அல்லவா! அது போல தான் மகாராணியின் நெஞ்சில் விஷத்தை ஊட்டினர் சிலர். மணிகண்டன் மகாராணிக்கு பிறந்த குழந்தை அல்ல என்றும் எல்லா உரிமைகளுக்கும் உகந்தவன் மகாராணி பெற்ற பிள்ளையே என்றும் மகாராணியிடம் கூறிக்கொண்டே இருந்தனர். அரசியும் கெட்ட போதனையால் தன்னை மறந்து மனம் மாறி போனாள். மணிகண்டனை இங்கிருந்து அழிக்க எண்ணி, ஒரு முறை அவருக்கு  வயிறு வலிப்பதாகவும் அதனால் அரசவை வைத்தியர் புலிப்பால் குடித்தால் தான் இந்த வயிற்று வலி தீரும் என்றும் கூறியதாக மணிகண்டனிடம் தெரிவித்தார்.

 புலிப்பால்

உலகமே அறிந்த ஐயப்பனுக்கு இந்த உண்மை புரியாதா என்ன. உண்மையை அறிந்தும் தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி சென்றார் ஐயப்பன். வழியில் அரக்கி மகஷி ஐயப்பனை தடுத்து நின்றாள். ஐயப்பனின் பிறப்பே இந்த அரக்கியை வதம் செய்வதற்காக தானே. வில்லாதி வில்லன் ஆன ஐயப்பன் வில்லை எடுத்து மகிஷியை வதம் செய்தார். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அதன்பிறகு மணிகண்டன் வந்த பணிக்காக இந்திரனே புலியாக மாறி மற்ற தேவர்களையும் புலியாக மாற வைத்து புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் மணிகண்டன். இதை சற்றும் எதிர்பாராத மகாராணி புலிமேல் வந்த ஐயப்பனை கண்டு பதறிப் போனார். தன்னுடைய தவறை உணர்ந்து மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டார். மணிகண்டனும் தன் தாயின் விருப்பப்படியே அவ்வாறே செய்து அருளினார். 

மேலும் படிக்க – மகாபலிபுரத்தின் சிறப்பு மற்றும் வரலாறு..!

 சபரி மலை

மேலும் ஐயப்பன் தான் அவதாரம் எடுத்ததற்கான காரணம் பூர்த்தி பெற்றதால் தன் தந்தையிடம் தான் சபரி மலையில் தவம் இருக்க போவதாகவும், மணிகண்டனை தரிசிக்க வேண்டுமானால் அவ்விடம் வந்து தரிசிக் கும்மாறும் கூறி, சபரிமலைக்குச் சென்று 18 படிகளுக்கு மேல் இருந்து தவக்கோலம் மேற்கொண்டார். 

இன்றும் ஐயப்பன் அங்கு தவக்கோலத்தில் இருப்பது போலவே நம்மால் காண முடியும். ஐயப்ப சுவாமியின் இரு கால்களிலும் துண்டு கட்டி இருப்பதையும் நம்மால் காணமுடியும். ஐயப்ப சாமியை காண அவரது தந்தை ஒரு முறை சபரிமலைக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாக ஐயப்ப சுவாமிகள் எழ முயன்றாராம். அப்போது தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக பந்தள மகாராஜா அவரது தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை எடுத்து ஐயப்பனை நோக்கி தூக்கி போட்டபோது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பனின் காலை சுற்றி கொண்டதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன